சனி, 30 ஜூன், 2018

மாவீரன் அழகுமுத்துக் கோன் (1710-1759)



வீரன் அழகுமுத்துகோன் 




          மாவீரன் அழகுமுத்துக் கோன் (1710-1759)

சுதந்திரப் போராட்டத்தில் வீரத்திலகமாய் விளங்கிய வீரன் அழகுமுத்துக்கோன் 11.07.1710 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள கட்டாலங்குளத்தில் தந்தை அழகுமுத்துக்கோன், தாயார் பாக்கியத்தாய் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் 1726 இல் தன்னுடைய 16 ஆவது வயதில் பட்டத்திற்கு வந்தார். 28 ஆவது பட்டம் ஜெகவீரராம வெங்கடேசுவர எட்டப்பரின் குமாரர் ஜெகவீரராம எட்டப்ப நாயக்கரிடம் நம்பிக்கைக்குரியவராகவும், நண்பராகவும் திகழ்ந்தார் விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன். 1755 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நெல்லைச் சீமையிலுள்ள எல்லா பாளையக்காரர்களிடமும் நேரடியாக வரிவசூலிக்க ஆரம்பித்தார்கள். எட்டயபுரத்திற்கும் வரி கேட்டு ஓலை வந்தது. விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் வந்தேறிகளுக்கு நாம் ஏன் வரி தர வேண்டும் என்று எட்டயபுர மன்னரிடம் வாதிட்டார்.
மன்னரும் அழகு முத்துக்கோனின் உணர்வினை ஏற்றுக்கொண்டார். பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க 1756 இல் கான்சாகிப் என்பவரை மதுரை, நெல்லைச் சீமைக்கு கமாண்டராக ஆங்கிலேயர்கள் நியமித்தனர்.
எட்டப்ப நாயக்கரின் தளபதி பூதலபுரம் எட்டையா, கான்சாகிப்பிடம் தன்னை மன்னராக்கினால் கப்பம் கட்டுகிறேன் என்றான். கான்சாகிப்பின் பீரங்கிப்படை எட்டயபுரத்தைத் தாக்கியது. எட்டயபுரம் ஆங்கிலேயர் வசமானது. விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் எட்டப்ப மன்னரைக் காப்பாற்றி அவரை பெருநாழிகாட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தார். எட்டயபுரத்தின் பூதலபுரம் எட்டயாவை மன்னராக அறிவித்தான் கான்சாகிப். பூதலபுரம் எட்டையா ஆடம்பர வாழ்வில் திளைத்து கப்பம் கட்டப் பணம் இல்லை என்று மறுத்தான். அவனை கான்சாகிப் கைது செய்து சிறையில் அடைத்தான். ஜெகவீரராம எட்டப்ப நாயக்கரின் தம்பியான குருமலைத்துரையை எட்டப்ப மன்னராக அறிவித்தான் கான்சாகிப். குருமலைத்துரை கப்பத் தொகையை உடனே கட்டினான்.
எட்டயபுரத்தை மீட்டெடுக்க விடுதலை வீரர் அழகுமுத்துக்கோன் படை திரட்டினார். மாவேலி ஓடை, பெத்தனாயக்கனூர் பகுதியிலிருந்து வீரர்கள் பலர் படையில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு வீரன் அழகுமுத்துக்கோன் போர் பயிற்சி அளித்தார். எட்டயபுரத்தை மீட்பதற்காக பெரிய படையினை உருவாக்கி அதனை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தார் வீரன் அழகுமுத்துக்கோன் ஒன்றிற்கு மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்பரும், மற்றொன்றிற்கு விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனும் தலைமை ஏற்றனர்.
படைகள் இரு வேறு திசையில் புறப்பட்டது. வீரன் அழகு முத்துக்கோன் தலைமை ஏற்ற படை இரவில் பெத்தனாயகனூர் கோட்டையில் தங்கியது. இதனை உளவறிந்த சிவசங்கரம் பிள்ளை கான்சாகிப்பிடம், இது தான் சரியான தருணம் இப்பொழுது அழகுமுத்துக்கோனை அழிக்காவிட்டால் எட்டயபுரம் ஆங்கிலேயரிடம் இருந்து பறிபோய்விடும் என்றும், பாளையக்காரர்கள் பயமற்று போவார்கள், வரி தர மறுப்பார்கள், உங்கள் அதிகாரத்தை எதிர்க்க எல்லோரையும் இணைத்து விடுவான் அழகுமுத்துக்கோன் என்றும் கூறினார்.
கான்சாகிப் படை, அழகுமுத்துக்கோன் தங்கிய பெத்தனாயக்கனூர் கோட்டையை முற்றுகையிட்டது. வீரர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நேரம் பார்த்து திடீர் தாக்குதல் யுத்தியை கையாண்டான் கான்சாகிப். இந்த திடீர் தாக்குதலை எதிர்கொள்ள இயலாமல் வீரர்கள் போரில் வீர மரணம் அடைந்தார்கள்.
அழகு முத்துக்கோன் உட்பட உயிருடன் பிடிபட்ட 255 வீரர்களிடமும் எட்டப்ப மன்னர் எங்கே? என்று கேட்டு துன்புறுத்தினார்கள். அவர்களை நடுக்காட்டுர் சீமை என்ற இடத்திற்கு இழுத்துச்சென்று 248 பேரின் வலது கரங்களை வெட்டி எறிந்தார்கள். அழகுமுத்துக்கோன், கெச்சிலணன் சேர்வை, வெங்கடேசுரரெட்டு சேர்வை, முத்தழகு சேர்வை, பரிவாரம் முத்திருளன் இவரது தம்பி செகவீர ரெட்டுலட்சுமணன், தலைக்காட்புரம் மயிலுப்பபிள்ளை ஆகிய ஏழு பேரையும் பீரங்கி வாயில் கட்டி வைத்து சுட்டுத்தள்ளினார்கள். 1759 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த கொடூரம் நிகழ்ந்தது. இதன் மூலம் விடுதலைக்கான விதை தமிழகத்தில் விதைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 11 ஆம் தேதி வீரர் அழகுமுத்துக்கோன் நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் விழா எடுத்து சிறப்பிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், செட்டிக்குறிச்சி சாலை, கட்டாலங்குளம், தேசிய நெடுஞ்சாலை எண். 7 கோவில்பட்டி, திருநெல்வேலி சாலையில் வீரன் அழகு முத்துக்கோன் நினைவு மண்டபம் ரூபாய் 38.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் 8.12.2004 அன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஆண்டுதோறும் ஜூலை 11 ஆம் நாளன்று அன்னாரது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முதல் சுதந்த்திர போராட்ட வீரர் மாமன்னர் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று நமது அமைப்புகள் தொடர்தந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறது






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக